சிறந்த பெற்றோராக இருப்போம்!

images9மக்கட் செல்வமே பிற செல்வங்கள் யாவற்றினும் சிறந்த செல்வம்’ எனக் கூறுகிறது வள்ளுவம். “பெற்றோர்’ என்ற சொல்லுக்கேற்ற தகுதி படைத்தவர்களாகவே பிள்ளைகளைப் பெற்ற தாய் தந்தையரும் வாழ்ந்து வந்துள்ளார்கள். “தம் பொருள் என்பர் தம் மக்கள்’ வள்ளுவர் வாய் மொழி இது. அறிவறிந்த “மக்கட் பேறு’ உடையவர்களே பெற்றோர் என்றும் கூறுகிறார்.

குழந்தைப் பேற்றுக்குத் தகுதியுடையவர்கள் இவர்கள் தாம் என்ற வரைமுறைகளை வகுத்திருந்தார்கள் அன்றையச் சான்றோர்கள். வயது வந்த இளைஞனும், பருவ மங்கையும் தாயும் தகப்பனும் ஆவதற்குரிய பக்குவத்தைப் பெற்றுள்ளார்கள் என்று அறிந்த பிறகே அன்றைய நாள்களில் திருமண ஏற்பாடுகளைச் செய்தார்கள்.

தன்னைச் சார்ந்துள்ள தனது பெற்றோர், மனைவி, பிள்ளைகள் முதலானவர்களைப் பேணிக் காக்கும் குடும்பப் பொறுப்புணர்வு, பொருளீட்டும் முயற்சி, பிறருக்குச் சான்றாக விளங்கும் தலைமைப் பண்பு, சிக்கல்கள் சவால்களை எதிர்கொண்டு சமாளித்து வெற்றி காணும் சாதுர்யம், துணிவு, தனது நற்பண்புகளைத் தம் மக்களுக்கும் பயிற்றுவிக்கும் நல் ஆசான் இன்னபிற தகுதிகள் வாய்க்கப் பெற்றுள்ள ஆண் மகனே இல்லற வாழ்வுக்கு ஏற்றவன் என்பது அன்றையச் சான்றோர் முடிவு.

குடும்பத்தை நடத்தும் பொறுப்புணர்வு, குடும்பத்தில் உள்ள அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சகிப்புத் தன்மை, மற்றும் தாய்மையாவதற்குரிய (உடல், உள்ளம், இரண்டிலும்) பக்குவ நிலை பெற்றுள்ள மங்கையர் தாம் மணவாழ்வுக்குத் தகுதி பெற்றவர்களாக வரையறுத்திருந்தார்கள். “பிள்ளைகளைப் பெறுவதனால் மட்டும் பெற்றோர் ஆகாமல், தமது நற்பண்புகளைப் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்ப்பவர்களே பெற்றோர் என்ற சொல்லுக்கு ஏற்புடையவர்கள் ஆவர்’ என்ற நமது முன்னோர்களது கருத்து மறுப்புக்குரிய தன்று.

“பத்து வயதுச் சிறுமி ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்டாள். தனது வகுப்பில் படிக்கும் பண்ணிரன்டு வயதுச் சிறுவனுடன் ஓர் ஆசிரியை உல்லாச வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டார்’. மேலை நாடுகளின் தவறான கலாசாரச் சூழலில் இந்நிகழ்வுகள் அங்கே சகஜம். நமது நாட்டலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்துவிட்டதாகத் தினசரி நாளேடுகளில் ஒரு மூளையில் பெட்டிச் செய்தியாக வருவதையும் பார்க்கிறோம். உடல் ரீதியாக மட்டும் சில சிறுவர் – சிறுமியர்கள், தாய் – தந்தையர்களாகி விடுகிறார்கள்.

“பள்ளி வகுப்பறையில் துப்பாக்கியால் சுட்டு சில மாணவர்களுடன் ஆசிரியரும் பலி. இரு மாணவர்களுக்கிடையே இருந்த சிறு பூசலால் ஒரு மாணவன் சக மாணவனைக் கத்தியால் குத்தியதால் அந்த இடத்திலேயே பலியானான். மதிப்பெண் குறைவாகப் போட்ட ஆசிரியரைத் தாக்கிவிட்டு மாணவன் தலைமறைவு’. இச்செய்திகள் நமக்குச் சில உண்மைகளைச் சூசகமாகச் சொல்கின்றன.
இத்தவறுகளுக்கு மாணவர்கள் மட்டுமே காரணமா என்ன? பிழையான வளர்ப்பு முறைகளைக் கையாண்ட பெற்றோர், கல்வியுடன் நற்பண்புகளையும் கற்பிக்காத கல்விக் கூடம், குற்றச் செயல்களால் மலிந்த சமுதாயம் இவர்களெல்லாம் சேர்ந்து பிஞ்சு உள்ளங்களைக் கெடுப்பதுடன் ஊடகங்கள் இந்த நச்சுப் பண்புகளின் வளர்ச்சிக்கு உரமாகின்றன.
இல்லங்களின் நடுக்கூடத்தில் அமர்ந்து கொண்டு வெளி உலகின் குப்பைகளையெல்லாம் வீட்டுக்குள் கொட்டும் தொலைக்காட்சியில் தொலைந்து போகும் சிறார்களே மிகுதி.

நற்பண்புகளைக் தாம் பெற்றுக் கொள்வதுடன் குழந்தைகளுக்கும் ஊட்டும் பெற்றோர் மிக மிகக் குறைவு. மாலை 5 மணியிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை தொலைக்காட்சிகளின் முன் கற்சிலைகளாக முடங்கும் பெற்றோர், தம் சிறார்கள் அருகிலிருக்கவே ஆபாசத் திரைப்படக் காட்சிகளில் மெய்ம்மறந்து லயித்துக் கிடப்போர், குழந்தைகளின் நெருக்கடிகளிலிருந்து விலகி நிற்க அக்குழந்தைகளைத் தொலைக்காட்சிகளின் முன் சிறை வைத்துக் கணினிப் பெட்டிக்குள் மூழ்குவோர் என எண்பது சதவீத வீடுகளில் நகரங்களில் இத்தகைய அவலங்களைக் காணலாம்.

இச்சீரழிவுக்கெல்லாம் முழுக்க முழுக்கக் காரணமாக இருப்பவை ஊடகங்கள் மட்டுமே என்று சொல்வதில் அர்த்தமில்லை. உண்ணும் உணவு முறைகளும் ஒருவகையில் காரணமாக உள்ளன. மது அருந்திய நிலையில் ஆபாசத் திரைப்படங்களில் மூழ்கும் கல்லூரி மாணவ – மாணவியர், உணர்வு மேலீட்டால் பாலியல் தவறுகளுக்கு ஆயத்தமாகி விடுகிறார்கள். கொழுப்பும் கார வகை உணவுகளும் உடல் ரீதியாக பாலியல் உணர்வுகளைத் தூண்டும் காரணிகள் தாம். அன்றாடம் மாமிச உணவுக்குப் பழக்கப்பட்ட குழந்தைகள் சிறு வயதிலேயே பாலியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பதினான்கு அல்லது பதினைந்து வயதை எட்டும் பருவத்திலேயே இளம் பெண்கள் பூப்பெய்தும் (வயதுக்கு வரும்) நிலையில் இருந்தார்கள். அதற்குப் பிறகு ஏழெட்டு ஆண்டுகள் கழித்தே திருமண ஏற்பாடுகள் செய்த காலம் அது.
இளைஞர்களும் பாலியல் உணர்வு பற்றிய சிந்தனையின்றியே மனக்கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தனர். நாகரிக வளர்ச்சி, பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் முதலான வாழ்வியல் மாற்றங்களால் பெண்களின் பருவ வயது படிப்படியாகக் குறைந்து தற்போது பத்து வயதிலேயே பூப்பெய்தும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

பிள்ளைகளைப் பெறுவதால் மட்டுமே பெற்றோர்களாகும் முதிர்ச்சியில்லாத ஆண் – பெண்களிடம் வளரும் குழந்தைகள் எப்படி நல்ல ஆரோக்கியமான வளர்ச்சியை அடைவர். அப்பிள்ளைகளிடம் நற்பண்புகளை எதிர்பார்ப்பது நமது தவறல்லவா? போதிய அளவில் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி அமைவது ஒருக்காலும் சாத்தியமாகாது. ஒரு தேசத்தின் பலம் ஆக்கபூர்வமான இளைஞர்களும் மகளிரும் தாம். ஆற்றல் மிக்க சந்ததியினரை இழந்து கொண்டிருப்பது நாட்டின் சாபமல்லவா?

நன்மக்களைப் பெற்றுள்ள தாய் – தந்தையரே பெற்றோர். பெற்றோருக்கான எல்லாத் தகுதிகளை பெறுவதுடன் நன்மக்களை நம் தேசத்துக்குத் தரும் பெற்றோராக ஆக முயல்வோம். பெற்றோர் என்ற சொல்லுக்கான முழுமையான தகுதிகளையும் பிள்ளைகளைப் பெறும் தாய் – தந்தையர் பெற்று வளர்க்கட்டும். தம்மினும் தம் மக்கள் அறிவுடையவர்களாகவும் நற்பண்பினராகவும் வாழ்வது பெற்றோருக்குச் சிறப்பும் பெருமையும் அல்லவா?

Post Author: